வெள்ளி, 22 மே, 2009

குடும்பத்துல சந்தோசம் வேணுமா ?

இரு தினங்களுக்கு முன்பு சன் செய்திகளின் இடையில் ஒளிபரப்பாகும் "சொன்னது யார்?" பகுதியில் வந்த செய்தி.


"குடும்பத்தில் அமைதி ஏற்பட வேண்டுமெனில் கணவன் மனைவியின் பேச்சை அப்படியே கேட்க வேண்டும். மனைவி கூறுவது முட்டாள்தனமாக கணவனுக்கு தோன்றினாலும் அதை அப்படியே செய்ய வேண்டும்."


இப்படிக் கூறியது மரியாதைக்குரிய உச்ச நீதி மன்ற நீதிபதி திரு. மார்கண்டேய கட்ஜு அவர்கள். இதை படித்ததும் எனக்குக் கிடைத்த ஒரு மின்னஞ்சல்தான் நினைவுக்கு வந்தது. அதன் தமிழாக்கத்தை இங்கு நான் உங்களுக்குத் தருகிறேன்.


நான் : மச்சான்! , நீ மட்டும் எப்படிடா கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கே ?


நண்பன் : மச்சான்! பொண்டாட்டி கிட்டே அன்பா மட்டும் இருந்தா மட்டும் போதாது. கொஞ்சம் குடும்பப் பொறுப்பையும் அவகிட்டே இருந்து பங்கு போட்டுக்கணும்.


நான் : மச்சான்! கொஞ்சம் புரியும்படி சொல்லேண்டா...


நண்பன் : கண்ணா, எங்க வீட்ல, பெரிய விஷயம், பெரிய பிரச்சனை எதாவது வந்தா, நாந்தான் முடிவு எடுப்பேன். அதேமாதிரி, சின்ன சின்ன விஷயம், பிரச்சனை வந்தா, என் பொண்டாட்டி தன் முடிவு எடுப்பா.


நான் : மச்சான்! பொறுமையா சோதிக்காதே, கொஞ்சம் விளக்கமா சொல்றியா?


நண்பன் : விஷயம் இவ்வளவுதான் மச்சி, என் பொண்டாட்டி, மாசத்துக்கு எவ்வளவு செலவு செய்யணும், எவ்வளவு சேத்து வைக்கணும், என்ன மாதிரியான கார் வாங்கனும், எப்போ ஊருக்கு போகணும், எந்த மாதிரி, சோபா செட், A/C, Fridge வாங்கனும், வேலைக்காரி வேணுமா வேண்டாமா?, இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் முடிவு செய்வா. நானும் அதை அப்படியே ஒத்துக்குவேன்.


நான் : அப்போ, நீ எந்த மாதிரி முடிவு எடுப்பே?


நண்பன் : அமெரிக்கா ஈரான் மேல போர் தொடுக்குமா? , டெண்டுல்கர் கிரிக்கெட் - இருந்து retire ஆகலாமா வேண்டாமா?, மன்மோகன் சிங் ,பாலுவுக்கு அமைச்சர் பதவி தரலாமா வேண்டாமா?, எத்தனை காபினெட் அமைச்சர் பதவி, தி.மு.. வுக்கு தரனும்.....இந்த மாதிரி விஷயமெல்லாம் நான் முடிவு எடுப்பேன், என் பொண்டாட்டி அப்படியே ஒத்துக்குவா


நான் : ?!?!*@#*@!!!


அது சரி, உங்க வீட்ல எப்படி அண்ணே !!!


வந்தது வந்துடீங்க. எப்படி இருந்திச்சின்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க. அப்படியே முடிஞ்சா ,வாக்குகளை நியூஸ் பானை மற்றும் "tamilish.காம்"-இலும் குத்துங்க. நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.

புதன், 20 மே, 2009

விடுதலை புலிகளின் வீழ்ச்சி - முடிவு அல்ல



May 17, 2009 அன்று விடுதலைப் புலிகள் இயக்கம் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து வரும் செய்திகளில் இயக்கத்தின் தலைவரும்,மற்ற தளபதிகளும் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர் என்பது தான். இது பொய் பிரச்சாரம் என்று அனைத்துலக தமிழர்களால் நம்பப்படுகிறது. இலங்கை அரசும், இலங்கை ராணுவமும் பல முறை இப்படி கட்டுக்கதைகளை பரப்பிவிடுவது வாடிக்கையாக கொண்டுள்ளது.

சரி, விடுதலைப் புலிகள் இயக்கம் , வீழ்ச்சியை காண காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

35 வருடங்கள் தமிழர்கள் மற்றும் தமிழ் ஈழத்திற்காக, பல ஆயுதப் போராட்டங்களை நடத்திய இந்த இயக்கம், அதன் லட்சியத்தை அடையாமல் போரிலிருந்து விலகி உள்ளது. இது தற்காலிகம் என்று நினைக்கிறேன்.

மிக முக்கியக் காரணமாக, May 21, 1991 அன்று இந்திய முன்னால் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களை ஒரு தேர்தல் கூட்டத்தில் தற்கொலைப் படையின் மூலம் கொலை செய்தது தான். (ஒரு இந்தியனாக என்னால் இதை மறக்க மற்றும் மன்னிக்க முடியவில்லை) இவ்வரலாற்றுப் பிழையை இவ்வமைப்பு செய்யாதிருந்தால் ஒரு வேளை தமிழ் ஈழம் கை கூடி இருக்கும். ஒரு இந்திய தலைவரை, முன்னால் பிரதமரை, இந்திய மண்ணில் கொலை செய்ததன் மூலம் இவ்வியக்கத்திற்கு கிடைத்து வந்த இந்தியாவின் அதரவு திரும்பப் பெற்றுகொள்ளபட்டது. (நான் பள்ளி மாணவனாக இருந்த காலங்களில் இலங்கை தமிழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் வெளிப்படையான அதரவு தமிழ் நாட்டில் இருந்தது. உண்ணா விரதங்கள், மறியல் போராட்டங்கள், அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்தனே கொடும்பாவி எரிப்பு என்று தமிழகமே அல்லலோகப்பட்டது.)
1987 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே ஆனா ஒப்பந்தத்தின் படி, இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பினார் திரு ராஜீவ் காந்தி அவர்கள். இதை தங்களின் பெரும் பின்னடைவாக கருதிய விடுதலை புலிகள் தங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தியது. இதன் விளைவாக 1000 -திற்கும் மேற்பட்ட வீரர்களை இழந்த இந்தியப்படை தாயகம் திரும்பியது. இத்துடன் புலிகள் நிறுத்திக்கொள்ளாமல் தற்கொலைப்படை மூலம் திரு ராஜீவ் காந்தியை கொலை செய்தது ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பிழை ஆகும். இதனால் இந்தியாவில் இந்த இயக்கம் தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது. மேலும் அதிபர் பிரேமதாசாவை மே தின கூட்டத்தில் 1993 ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் மூலம் கொலை செய்ததன் மூலம் உலக நாட்டுகளின் கண்டனத்திற்கு உள்ளானது இந்த இயக்கம். இருப்பினும் இந்த இயக்கம் துவளாமல் தனது போராட்டத்தை தொடர்ந்தது.
இந்த நிலையில் இலங்கை அரசின் பிரிதலும் சூழ்ச்சி மூலம் கிழக்கு மாகான தளபதி கருணாவை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் வெற்றி கண்டது. கருணா வெளியேறியது மிகப் பெரிய சறுக்கல் தான். மிகச் சிறந்த உளவு அமைப்பு மற்றும் உளவாளிகளை கொண்டிருந்த இந்த இயக்கம் எப்படி இலங்கை அரசின் நடவடிக்கைகளை கண்காணிக்காமல் இருந்தது? இதைத்தான் விதி என்பார்களோ? இன்றைய எட்டப்பன் என்று உலகத் தமிழர்களால் தூற்றப்படுகின்ற கருணாவை இயக்கத்தை விட்டு வெளி ஏற விட்டது இயக்கத்தின் மற்றொரு பின்னடைவு. இயக்கத்தின் இன்றைய நிலைக்கு கருணா முக்கிய பங்கு வகித்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த இயக்கத்தில் அரசியல் அமைப்பு இருந்துள்ளது. இதை இன்னும் சற்று வலுப்படுத்தி இருக்கலாம். நேபாளத்தில் மன்னர் ஆட்சிக்கு எதிராக போராட்டம் செய்த Maoist தீவிரவாதிகள் தக்க சமயத்தில் சனநாயக பாதைக்கு திரும்பி தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியையும் கைப்பற்றி உள்ளார்கள். இந்த முறையை புலிகளும் செய்திருந்தால் உலக நாடுகள் இந்த இயக்கத்தை ஒரு தீவிரவாத இயக்கமாக மட்டும் பார்க்காமல் சனநாயகத்தை நோக்கி பயணிக்கின்ற இயக்கமாக பார்த்திருக்கும் வாய்ப்பு இருந்திருக்கும். அவ்வாறு செய்யாமல் தனது ஆயுதம் மற்றும் படை பலத்தை மட்டும் நம்பி தன்னை ஒரு தீவிரவாத அமைப்பாக காட்டி கொண்டதூம் ஒரு தவறாகும். ஈழம் அமைய மற்றும் ஈழத் தமிழர்களுக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட இந்த இயக்கம் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணாமல் போனது துரதிருஷ்டம் ஆகும்.
2005 ஆம் ஆண்டு நடந்த இலங்கை தேர்தலில் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலையை இந்த இயக்கம் எடுத்ததின் விளைவாக மீண்டும் தனது தவறை தொடர்ந்தது. இதுவும் இவ்வியக்கத்தின் உளவமைப்பின் தோல்வி என்றே கூறலாம். இப்பகுதி மக்களின் வாக்குகள் இல்லாமல் போனதால் இன்றைய அதிபர் ராஜபக்சவின் வெற்றிக்கு வழி வகுத்து அதிபராக பதவி ஏற்க வைத்தது. பதவி ஏற்ற சில நாட்களில் 2002 ஆம் ஆண்டு கைஒப்பமான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு 2008 ஆம் ஆண்டு முதல் போர் தொடங்கியது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக நடந்த இந்தப் போர் May 17, 2009 அன்று விடுதலை புலிகளின் போர் நிறுத்த அறிவிப்போடு முடிவுக்கு வந்தது. தற்போது ஒரு தரப்பு தாக்குதல்கள் மட்டும் நடந்து வருகிறது.
விடுதலை புலிகள் போரில் இருந்து பின்வாங்கியது தமது மக்களை காக்கவே. இந்த போராட்டம் தொடரும். அவர்களின் இலக்கு "தமிழ் ஈழம்"அடையும்வரை. இந்த இயக்கத்தின் இந்த வீழ்ச்சி தற்காலிகம் ஆனதுதான். இது முடிவு அல்ல, ஆரம்பமே!
கண்ணோட்டத்தின் நிறை குறைகளை, பின்னோட்டமிடுங்கள். வாக்குகளை நியூஸ் பானை மற்றும் "tamilish.காம்"-இலும் அளியுங்கள். நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.

புதன், 13 மே, 2009

மதுரைக்காரத்தம்பியின் தேர்தல் கண்ணோட்டம்



கடந்த இரண்டு மாதங்களாக நடந்தத் தேர்தல் திருவிழா வருகின்ற வெள்ளிக்கிழைமையுடன் (16.05.2009) முடியப்போகிறது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் சாதகம் இல்லாத சூழல் நிலவுவதால் யார் அரியணை ஏறுவார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளதால் அனைத்து கட்சிகளும் "த்ரில்லர்" படம் பார்த்த ரசிகர்கள் போல் உள்ளது.


எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு நான்காவது அணி, ஐந்தாவது அணி என்று கூட்டணி அமைத்து போட்டி போடும் கூத்து இபொழுதுதான் நடந்து வருகிறது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பது தேர்தலுக்கு முன்பே தெரிந்த விஷயம். இதற்கு இரண்டு மிக முக்கியக் காரணங்கள் கூறப்படுகின்றன.



  1. பிராந்தியக் கட்சிகளும், பிராந்தியப் பிரச்சினைகளும்.

  2. வாக்காளர்களின் மனப்போக்கு. என் ஒருவனால் என்னவகிவிடப் போகிறது என்கிற மனப்பான்மை. (எல்லாவித ஊடகங்களும் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை விளம்பரப்படுத்தியும் இது வரை 50% முதல் 52% வாக்குகளே பதிவாகி உள்ளன. 50% இந்தியர்கள் சனநாயகக் கடைமையை அற்ற விரும்பவில்லை என்பது தெளிவுப்படுதுகிறது.)

காங்கிரஸ்,பா.. மற்றும் மூன்றாவது அணி ஆகிய மூன்று அணிகளுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. Magic நம்பர் என்று அழைக்கப்படும் 180 சீட்டுகள் எந்தக் கட்சிக்குக் கிடைக்கிறதோ அந்தக் கட்சி, தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, மூன்றாவது மற்றும் நான்காவது அணிகளில் உள்ளக் கட்சிகளை தன்னுடன் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டு ஆட்சி அமைக்க முற்படும். இதை நிருபிக்கும் விதமாக இப்போதே கட்சிகள் கூட்டணித் தாவல்களை அரங்கேற்றி வருகின்றன. தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி என்கிற ஆந்திரக் கட்சி, பா.ஜ.க உடன் கூட்டணி அமைத்து பிள்ளையார் சுழி. தேர்தல் முடிவுகளை பொறுத்து இந்தத் தாவல்கள் இன்னும் அதிகமாக அரங்கேறும்.


கடந்த ஆட்சியில் இருந்த சில அமைச்சர்களுக்கு இந்தத் தேர்தல் சாதகமாக இல்லை. லாலு யாதவ் இந்த முறை அமைச்சர் ஆவது அவ்வளவு சுலபம் இல்லை. மக்கள் அதரவு அவருக்கு இம்முறை பீகாரில் இல்லை என்பது அவருக்கு விளங்கிவிட்டது. ஆந்திராவில் சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் காரணமாக யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கு என்பது Suspense ஆக உள்ளது. காங்கிரசுக்கு இம்முறை மாநில அட்சி என்பது கஷ்டம் தான்.


தமிழகத்தில் விஜயகாந்தின் வாக்குப்பிரிப்பு வேலை இந்த தேர்தலிலும் தொடரும். தி.மு. அதிக இடங்களை பெற முடியாத பொழுது காங்கிரஸ் தி.மு.க-வை கை கழுவிவிடும் சத்திய கூறுகள் அதிகம் உள்ளது. .தி.மு. - உடன் கை கோர்க்க காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இரண்டும் முயற்சி செய்யும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில், ஆ.தி.மு.க தமிழகத்தில் தி.மு.க ஆட்சியை எந்தக் கட்சி கலைக்க ஒத்துக்கொள்கிறதோ அக்கட்சியுடன் கூட்டு சேரும். பா.ஜ.க சட்டப்பிரிவு 365 பயன்படுத்த தயங்கும். இதற்கு அந்தக் கட்சியின் கடந்த கால அனுபவங்களின் விளைவு ஆகும். இந்த சட்டப்பிரிவினால் அதிகம் பாதிக்கப்பட்ட கட்சி பா.ஜ.க தான். எனவே, ஆ.தி.மு.க முதலில் பா.ஜ.க-உடன் கூட்டணி வைத்தால் ஆட்சி அதிக நாள் தாங்காது.


ஒருவேளை ஆ.தி.மு.க காங்கிரசுக்கு அதரவு என்ற நிலை எடுத்தால் ஆட்சியை கைப்பற்றிக் கொள்ள காங்கிரஸ் ஆ.தி.மு.க-வின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ளும்.


சரி, காங்கிரஸ்,பா.ஜ.க அல்லாமல் மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தால் என்னவாகும். தொண்ணுறுகளில் நடந்த கூத்தே திரும்ப அரங்கேறும். வழக்கம் போல் பா.ஜ.க எதிர்க்கட்சி வரிசையில் அமரும். காங்கிரஸ் வெளியில் இருந்து அதரவு என்று அறிவிக்கும். பிறகு ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் அதன் வேலையை ஆரம்பித்துவிடும்.


எல்லாம் சரி, மூன்றாவது அணியில் யார் பிரதமர் என்ற கேள்வியை மட்டும் கேட்காதீர்கள். அதற்கு விடை அவர்களுக்கும் தெரியாது, அந்த ஆண்டவனுக்கும் தெரியாது.


கண்ணோட்டத்தின் நிறை குறைகளை, பின்னோட்டமிடுங்கள். வாக்குகளை நியூஸ் பானை மற்றும் "tamilish.காம்"-இலும் அளியுங்கள். நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.



புதன், 6 மே, 2009

நேபாளம் - ஒரு புதிய இந்திய சிக்கல்

நேபாளம், இந்தியாவை ஒட்டியுள்ள ஒரு சிறிய நாடு. கத்மாண்டுவை தலைநகரமாய் கொண்டுள்ள இந்த நாடு சில வருடங்களுக்கு முன்பு வரை மன்னராட்சியின் கீழ் இருந்தது. இந்த மன்னரட்சியை எதிர்த்து தீவிரமாய் போராடிக்கொண்டிருந்தவர்கள் Maoist என்ற கம்யூனிச கொள்கை கொண்ட அமைப்பு. தற்போது நடக்கும் சனநாயக ஆட்சிக்கு முன்பு வரை தீவீரவாதப்பாதையில் இருந்தவர்கள் தற்போது சனநாயகத்தை தேர்ந்தெடுத்து தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியிலும் அமர்ந்தனர்.

ஆனால், தற்போது சனநாயகம் ஆட்டம் கண்டுகொண்டு இருக்கிறது. இராணுவ தளபதியின் பதவி நீக்க உத்தரவை பிரதமர் திரு புஷ்பா கமல் தால் உத்தரவிட, அந்த உத்தரவை நிராகரித்துவிட்டார் நேபாள ஜனாதிபதி

இதையடுத்து பிரதமர் பதவி விலகி விட்டார். Maoist-கள் தற்போது நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலை, இந்தியா மற்றும் இந்தியத் தூதரால் தான் என்று பகிரங்கமாக குற்றஞ் சாட்டியுள்ளனர்.

இதை இந்தியா மறுத்துள்ள போதிலும் நேபாள மக்களிடையே இந்தக் கருத்து ஆணித்தரமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அங்கு வெளியாகும் நாளிதழ்களே சாட்சி.

இது தொடரும் பட்சத்தில், இந்தியாவிற்கு சீனா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா மற்றும் பங்களாதேஷ் வரிசையில் நேபாளமும் சேர்ந்து தலை வழியை கொடுக்கும். இந்திய வெளி உறவுத் துறை என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.