புதன், 20 மே, 2009

விடுதலை புலிகளின் வீழ்ச்சி - முடிவு அல்ல



May 17, 2009 அன்று விடுதலைப் புலிகள் இயக்கம் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து வரும் செய்திகளில் இயக்கத்தின் தலைவரும்,மற்ற தளபதிகளும் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர் என்பது தான். இது பொய் பிரச்சாரம் என்று அனைத்துலக தமிழர்களால் நம்பப்படுகிறது. இலங்கை அரசும், இலங்கை ராணுவமும் பல முறை இப்படி கட்டுக்கதைகளை பரப்பிவிடுவது வாடிக்கையாக கொண்டுள்ளது.

சரி, விடுதலைப் புலிகள் இயக்கம் , வீழ்ச்சியை காண காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

35 வருடங்கள் தமிழர்கள் மற்றும் தமிழ் ஈழத்திற்காக, பல ஆயுதப் போராட்டங்களை நடத்திய இந்த இயக்கம், அதன் லட்சியத்தை அடையாமல் போரிலிருந்து விலகி உள்ளது. இது தற்காலிகம் என்று நினைக்கிறேன்.

மிக முக்கியக் காரணமாக, May 21, 1991 அன்று இந்திய முன்னால் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களை ஒரு தேர்தல் கூட்டத்தில் தற்கொலைப் படையின் மூலம் கொலை செய்தது தான். (ஒரு இந்தியனாக என்னால் இதை மறக்க மற்றும் மன்னிக்க முடியவில்லை) இவ்வரலாற்றுப் பிழையை இவ்வமைப்பு செய்யாதிருந்தால் ஒரு வேளை தமிழ் ஈழம் கை கூடி இருக்கும். ஒரு இந்திய தலைவரை, முன்னால் பிரதமரை, இந்திய மண்ணில் கொலை செய்ததன் மூலம் இவ்வியக்கத்திற்கு கிடைத்து வந்த இந்தியாவின் அதரவு திரும்பப் பெற்றுகொள்ளபட்டது. (நான் பள்ளி மாணவனாக இருந்த காலங்களில் இலங்கை தமிழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் வெளிப்படையான அதரவு தமிழ் நாட்டில் இருந்தது. உண்ணா விரதங்கள், மறியல் போராட்டங்கள், அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்தனே கொடும்பாவி எரிப்பு என்று தமிழகமே அல்லலோகப்பட்டது.)
1987 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே ஆனா ஒப்பந்தத்தின் படி, இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பினார் திரு ராஜீவ் காந்தி அவர்கள். இதை தங்களின் பெரும் பின்னடைவாக கருதிய விடுதலை புலிகள் தங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தியது. இதன் விளைவாக 1000 -திற்கும் மேற்பட்ட வீரர்களை இழந்த இந்தியப்படை தாயகம் திரும்பியது. இத்துடன் புலிகள் நிறுத்திக்கொள்ளாமல் தற்கொலைப்படை மூலம் திரு ராஜீவ் காந்தியை கொலை செய்தது ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பிழை ஆகும். இதனால் இந்தியாவில் இந்த இயக்கம் தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது. மேலும் அதிபர் பிரேமதாசாவை மே தின கூட்டத்தில் 1993 ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் மூலம் கொலை செய்ததன் மூலம் உலக நாட்டுகளின் கண்டனத்திற்கு உள்ளானது இந்த இயக்கம். இருப்பினும் இந்த இயக்கம் துவளாமல் தனது போராட்டத்தை தொடர்ந்தது.
இந்த நிலையில் இலங்கை அரசின் பிரிதலும் சூழ்ச்சி மூலம் கிழக்கு மாகான தளபதி கருணாவை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் வெற்றி கண்டது. கருணா வெளியேறியது மிகப் பெரிய சறுக்கல் தான். மிகச் சிறந்த உளவு அமைப்பு மற்றும் உளவாளிகளை கொண்டிருந்த இந்த இயக்கம் எப்படி இலங்கை அரசின் நடவடிக்கைகளை கண்காணிக்காமல் இருந்தது? இதைத்தான் விதி என்பார்களோ? இன்றைய எட்டப்பன் என்று உலகத் தமிழர்களால் தூற்றப்படுகின்ற கருணாவை இயக்கத்தை விட்டு வெளி ஏற விட்டது இயக்கத்தின் மற்றொரு பின்னடைவு. இயக்கத்தின் இன்றைய நிலைக்கு கருணா முக்கிய பங்கு வகித்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த இயக்கத்தில் அரசியல் அமைப்பு இருந்துள்ளது. இதை இன்னும் சற்று வலுப்படுத்தி இருக்கலாம். நேபாளத்தில் மன்னர் ஆட்சிக்கு எதிராக போராட்டம் செய்த Maoist தீவிரவாதிகள் தக்க சமயத்தில் சனநாயக பாதைக்கு திரும்பி தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியையும் கைப்பற்றி உள்ளார்கள். இந்த முறையை புலிகளும் செய்திருந்தால் உலக நாடுகள் இந்த இயக்கத்தை ஒரு தீவிரவாத இயக்கமாக மட்டும் பார்க்காமல் சனநாயகத்தை நோக்கி பயணிக்கின்ற இயக்கமாக பார்த்திருக்கும் வாய்ப்பு இருந்திருக்கும். அவ்வாறு செய்யாமல் தனது ஆயுதம் மற்றும் படை பலத்தை மட்டும் நம்பி தன்னை ஒரு தீவிரவாத அமைப்பாக காட்டி கொண்டதூம் ஒரு தவறாகும். ஈழம் அமைய மற்றும் ஈழத் தமிழர்களுக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட இந்த இயக்கம் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணாமல் போனது துரதிருஷ்டம் ஆகும்.
2005 ஆம் ஆண்டு நடந்த இலங்கை தேர்தலில் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலையை இந்த இயக்கம் எடுத்ததின் விளைவாக மீண்டும் தனது தவறை தொடர்ந்தது. இதுவும் இவ்வியக்கத்தின் உளவமைப்பின் தோல்வி என்றே கூறலாம். இப்பகுதி மக்களின் வாக்குகள் இல்லாமல் போனதால் இன்றைய அதிபர் ராஜபக்சவின் வெற்றிக்கு வழி வகுத்து அதிபராக பதவி ஏற்க வைத்தது. பதவி ஏற்ற சில நாட்களில் 2002 ஆம் ஆண்டு கைஒப்பமான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு 2008 ஆம் ஆண்டு முதல் போர் தொடங்கியது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக நடந்த இந்தப் போர் May 17, 2009 அன்று விடுதலை புலிகளின் போர் நிறுத்த அறிவிப்போடு முடிவுக்கு வந்தது. தற்போது ஒரு தரப்பு தாக்குதல்கள் மட்டும் நடந்து வருகிறது.
விடுதலை புலிகள் போரில் இருந்து பின்வாங்கியது தமது மக்களை காக்கவே. இந்த போராட்டம் தொடரும். அவர்களின் இலக்கு "தமிழ் ஈழம்"அடையும்வரை. இந்த இயக்கத்தின் இந்த வீழ்ச்சி தற்காலிகம் ஆனதுதான். இது முடிவு அல்ல, ஆரம்பமே!
கண்ணோட்டத்தின் நிறை குறைகளை, பின்னோட்டமிடுங்கள். வாக்குகளை நியூஸ் பானை மற்றும் "tamilish.காம்"-இலும் அளியுங்கள். நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.

6 கருத்துகள்:

  1. 1986- ஸ்ரீசபாரத்தினம்(அவருடன் அவருடைய சகாக்கள் 300 பேர்) அவர்களை கொன்றார்கள், 1990- பத்மநாப(அவருடன் அவருடைய சகாக்கள் 18 பேர்) அவர்களை எழும்பூரில் வைது கொன்றார்கள்

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் ஷீபா அவர்களே. சகப்போராளிகளை கொன்றது விடுதலை புலிகள் மட்டும் ஈழத்திற்காக போராட வேண்டும் என்ற கருத்து இந்தியாவில் நிலவுகிறது. உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. புலிகள் ஆயுதங்களை இந்திய அமைதிப்படையிடம் கையளித்தபோது என்ன நடந்தது என்பதை மறக்கவேண்டாம். பல குழுக்கள் இருக்குமாயின், ஈழ விடுதலை என்றோ நீர்த்துப்போயிருக்கும். இவர்க்ளில் யாரேனும் ஒருவர், இன்றைய கருனாநிதியைப்போலோ, கருணாவைப்போலோ வந்துவிடக்கூடாது என்ற தொலைநோக்குதான், அவர்கள் அனைவரையும் அழித்தது என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. புலிகளின் இன்றைய நிலைக்கு தமிழக முதல்வர் கருணாநிதியை குற்றஞ் சொல்வது நியாயம் ஆகாது. கருணா வைப்பற்றி எனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். "இலங்கை அரசின் சூழ்ச்சி மூலம் கிழக்கு மாகான தளபதி கருணாவை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் வெற்றி கண்டது. கருணா வெளியேறியது மிகப் பெரிய சறுக்கல் தான். மிகச் சிறந்த உளவு அமைப்பு மற்றும் உளவாளிகளை கொண்டிருந்த இந்த இயக்கம் எப்படி இலங்கை அரசின் நடவடிக்கைகளை கண்காணிக்காமல் இருந்தது?" .
    தாங்கள் கூறிய கருத்திலேயே புலிகளின் தொலை நோக்கு பார்வை எடுபடவில்லை என்பது தெளிவாகிறது. மற்ற குழுக்களில் இருந்து ஒரு துரோகி உருவாகி கூடாது என்ற நிலை எடுத்த புலிகள் அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் இயக்கத்தில் இருந்தே "கருணா" என்கிற இனத்துரோகி உருவாவதை தடுக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. மற்றவர்களைபோல், கருணாவை புலிகள் கொலை செய்யத் தவரியது தவருதான் என்பதை நானும் வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. நளன் அவர்களே, தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு